மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவிலும் மணம் மயக்கும் மல்லிகையும்தான். பிரசித்தி பெற்ற மதுரை மல்லிகைப்பூக்கள் வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதியாகிறது. இந்த பூவுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே மதுரை மல்லிதான் நமது நாட்டின் புவியியல் அடையாளத்திற்குரிய மலராக முதன் முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்று டிரேட் மார்க் துணை பதிவாளர் சின்னராஜா ஜி.நாயுடு கூறியுள்ளார்.
மத்திய அரசின் வணிகவியல் துறையின்கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமைக் கழகம் 27 மாதங் களுக்குப் பிறகு கடந்த செப்டம்பரில் மதுரை மல்லிக்கு இக்குறியீடு வழங்க முடிவு எடுத்தது. தனது 45ம் இதழில் இதற்கான அறிவிப்பை அப்போது வெளியிட்டது. இதற்கு எதிர்கருத்துக்கள் இருப்பின் அது குறித்து தெரிவிக்க 4 மாதம் கால அவகாசமும் வழங்கியது. ஆனால், இந்த 4 மாதங்களில் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு தருவதற்கு என எந்த ஆட்சேபக் கருத்தும் வரவில்லை. எனவே தற்போது மதுரை மல்லிக்கு ''புவிசார் குறியீடு'' அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் மதுரை மல்லி பயிரிடப்படுகின்றன. இவ்வகை பூக்களின் இதழ்கள் வட்ட வடிவில், நான்கு அடுக்கு கொண்டவை.மதுரை மல்லி மொட்டுக்கள் தாமதமாகவே விரிகின்றன. மனதை மயக்கும் ஆழ்ந்த நறுமணம் கொண்ட இந்த மல்லிகைப் பூக்களை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சூடுவார்கள்.கருமையான கூந்தலில் வெண்மைநிற மல்லிகையை சூடிக்கொள்வதே தனி அழகுதரும்.
மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 5 மாவட்டத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் மதுரை மல்லியை விளைவித்து வருகின்றனர். தனியார் அமைப்பு ஒன்று, மதுரை வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மதுரை மல்லி விவசாயிகள் சங்கம் மூலமாக மதுரை மல்லி பூக்களுக்கு பதிவுரிமை கோரி சென்னையில் உள்ள புவியியல் அடையாள பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்திருந்தது.
ConversionConversion EmoticonEmoticon